A call on the phone... the teacher who stole two lakhs!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற பெண் ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது மின் கட்டணத்தைக் கட்டாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் தனது சகோதரரிடம் ஆன்லைன் மூலமாக மின்கட்டணத்தைக் கட்டச் சொல்லியிருக்கிறார். அவரது சகோதரரும், ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தைக் கட்டியுள்ளார். இந்த நிலையில், ஒருசில நாட்களுக்குப் பிறகு அந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.

Advertisment

அந்த மெசேஜை ஆசிரியைத் திறந்து பார்த்தபோது, அதில் நீங்கள் மின்சார கட்டணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாததால் பைன் போடப்பட்டிருக்கிறது. இன்று இரவுடன் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த மெசேஜ் வந்த நம்பரை ஆசிரியைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் உங்கள் வீட்டின் மின்சாரத்தைத் துண்டிக்காமல், இருக்க வேண்டுமென்றால் நாங்கள் உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு அப்ளிகேஷனை அனுப்பி வைக்கிறோம். அந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்றார்.

Advertisment

இதை உண்மை என்று நம்பிய அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை அந்த நபர் கூறியவாறு அப்ளிகேஷனை தனது செல்போனில் டவுன்லோடு செய்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, அதில் பத்து ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் சென்று 10 ரூபாய் கூகுள் பே மூலம் கட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்தது. அந்த ஓ.டி.பி. நம்பரை ஆசிரியை, அந்த அப்ளிகேஷனில் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 46 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலைக் கண்டு அந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பிறகு ஆசிரியை இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

Advertisment

அதன் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நூதன மோசடி சம்பவம் ஒய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, "தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் பல்வேறு நவீன திருட்டுகள், மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் யாரும் முன் பின் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் போனை நம்பி ஏமாற வேண்டாம். அதேபோல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக வரும் விளம்பரங்களை நம்பியும் ஏமாற வேண்டாம்.

மேலும், மோசடி கும்பல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து போன் செய்து உங்கள் போன் எண்ணை 5 ஜி சேவைக்கு மாற்ற வேண்டும். உங்களை பற்றிய விவரங்களை கூறுங்கள் என்று போன் செய்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம். தற்போது சில நாட்களாக, இது போன்ற மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது" என்கின்றனர்.