தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கியது. இந்தக் கூட்டத்தில், நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

Advertisment

அதேபோல், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் காலை 11 மணிக்கு துவங்கிய அமைச்சரவைக் கூட்டம் 12 மணிக்கு முடிந்தது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கூடுதலாக முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் முதலமைச்சரும்திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

Advertisment

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தருகிறார். அதுகுறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.