Skip to main content

சிஏஏ வேண்டாம்... ரத்தம் கொடுத்துப் போராடிய இளைஞர்கள்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்புகள் அதிகம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திருத்தச் சட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று மோடியும், அமித்ஷாவும் சொல்வதுடன் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போராட்டம் வேகமெடுத்து வருகிறது. 

CAA YOUNGTERS BLOOD DONATED THANJAI DISTRICT

நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை பல கோடி ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்தும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.


இப்படி பல நூதன போராட்டங்கள் நடந்து வரும் தஞ்சை மாவட்டம் ஆவணம் கிராமத்தில் தங்கள் போராட்டமும் பலருக்கு பலன் கொடுக்க வேண்டும் என்பதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இளைஞர்கள் 50 பேர் குடியுரிமை திருத்தச் சடடத்தைத் திரும்பப் பெறு என்று ரத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட இளைஞர்களின் ரத்தத்தை தஞ்சை தனியார் ரத்த வங்கி பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். ரத்தம் கொடுத்தும் போராடுகிறோம். ஆனால் மத்திய மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லையே என்கிறார்கள் இளைஞர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.