Skip to main content

சி.வி. சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
C, V. Shanmugam ordered to appear in court

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலம் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசும்போது, தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் டி. சுப்ரமணியம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதே சமயம் கடந்த மே 1 ஆம் தேதி கோட்டக்குப்பம் என்ற இடத்திலும் சி.வி. சண்முகம் இதேபோன்று அவதூறாகப் பேசி இருந்தார். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த இரு வழக்குகளும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி (21.11.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் 3வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் இந்த வழக்கை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதேபோன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த ஜூன் மாதம் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் மீது 3வது வழக்காக தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி பூர்ணிமா இன்று (20.12.2023) விசாரணை செய்தார். இதனையடுத்து சி.வி. சண்முகத்தை ஜனவரி மாதம் 4 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். 

சார்ந்த செய்திகள்