
நாடு முழுக்க கரோனாவின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவல்லை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், தொடர்ந்து 18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கும் என இந்திய அளவிலும், தமிழகத்திலும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் இந்த இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொது மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதேபோல் தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி போட மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் தடுப்பூசி எண்னிக்கை குறைவாக இருப்பதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் டோஸ் போடாமல் திணறி வருகின்றனர். ஆனால், அதேநேரம் கோவிஷில்டு தினமும் 100 பேரு வீதம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 946 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள 39 ஆயிரத்து 50 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அதேசமயம், மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. எந்த நாளில் எத்தனை பேருக்கு எந்த இடத்தில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் மக்கள் குழம்பி விருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காந்திஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், அகத்தியர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், கருங்கல்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், வீரப்பன்சத்திரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், ராஜாஜி புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், நேதாஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பிபி அக்ரகாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பெரியசேமூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், சூரம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும் கோவிசீல்டு தடுப்பூசி 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்பட்டது.
இதற்காக காலையிலேயே வந்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டது. அதேநேரம் கோவாக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 100 பேருக்குதான் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தெரியாமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 முதல் 500 பேர் வரை திரண்டனர். ஆனால், அவர்களுக்கு டோக்கன் வழங்க முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த மக்கள், தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டோக்கன் கிடைக்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதைப்போல் பிபி அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் அதிக அளவு கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைப் போன்று பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.