Skip to main content

நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை; கொதிப்பில் விவசாயிகள்!

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 

இந்தப் புறவழிச் சாலை முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே திருவையாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

 

இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த முனைப்பு காட்டியது. இதைத் தொடர்ந்து கடந்த நவ. 6ம் தேதி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புறவழிச்சாலை பணிகளைத் துவக்கி வைத்தார். தற்போது 150 அடி அகலம் கொண்ட சாலையில் 100 அடி அளவுக்கு செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது. அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களை அழித்து அதன் மீது பொக்லைன் இயந்திரங்களை கொண்டு செம்மண் கிராவல்கள் பரப்பப்படுகிறது.

 

கடந்த சில நாட்களாக இப்பணிகள் நடைபெற்று வந்தாலும், நேற்று கண்டியூர் பகுதியில் சம்பா நெற்பயிர் மீது செம்மண் கிராவல் கொண்டு நெற்பயிரை அழிப்பதை பார்த்த விவசாயிகள் திரண்டு வந்து பொக்லைன் இயந்திரங்களை மறித்தனர். மேலும், விவசாயிகள் கருப்பு கொடியை வயல்களில் நட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தகவல் அறிந்ததும் திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் க.ராஜ்மோகன் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேசினார். 

 

அப்போது விவசாயிகள் எங்களது நிலத்தை கையகப்படுத்த எந்தவித அறிவிப்பும், நோட்டீஸும் வழங்கவில்லை. அதற்கான இழப்பீட்டு தொகையையும் கொடுக்கவில்லை. தற்போது கோ51 நெல் ரகத்தை சம்பா சாகுபடியாக நடவு செய்துள்ளோம். நெற்கதிர் வரும் தருவாயில் உள்ளது. எங்களது கண்முன்னே நெற்கதிரை அழிப்பதை பார்க்க முடியவில்லை. எனவே அறுவடை முடிந்ததும் சாலையை அமையுங்கள். எங்களுக்கு உரிய இழப்பீட்டை அதிகப்படுத்தி தாருங்கள். விவசாய நிலத்தை அழித்துதான் சாலை அமைக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு சாலையே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி பணிகளைத் தடுத்தனர். 

 

இதனால் டி.எஸ்.பி ராஜ்மோகன், விவசாயிகளை இங்கிருந்து செல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார். இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை அமைக்கும் பணியைத் தடுத்தனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்ததால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து விவசாயிகள் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கலைந்து சென்றனர். அதன் பிறகு மீண்டும் இரண்டு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சம்பா நெற்பயிர்களை அழித்து சாலை அமைக்கும் பணி தொடர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்