Skip to main content

புகைபிடிப்பது போன்ற காட்சியை வெளியிட்டு தமிழக மக்களுக்கு விஜய் என்ன சொல்ல வருகிறார்? ராமதாஸ் காட்டம்!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
vijay


கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் முதல் சுவரொட்டி இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதைவிட மோசமான இச்செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்குக்கான தலைசிறந்த ஊடகம் ஆகும். அவற்றின் மூலம் மக்களிடம் நல்லெண்ணங்களையும் விதைக்கலாம்; நஞ்சையும் விதைக்கலாம். ஒரு திரைப்படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிடும்போதே அத்திரைப்படத்தின் கதாநாயகன் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை வெளியிடுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்.

 

 

இதன்மூலம் படத்தின் நாயகன் விஜய் முதல் படக்குழுவினர் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்கள்? புகைப்பது உடலுக்கும், உடல் நலனுக்கும் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் புகை நல்லது என நினைத்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட மாட்டார்களா? இது தான் தமது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் காட்டும் நல்வழியா? சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேடும் நோக்குடன் இவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அதை விட பெரிய இழிவு இல்லை.

திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்கள் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டனர்.

தொடக்கத்தில் இத்தகைய அறிவுரைகளை மதிக்காத நடிகர் ரஜினிகாந்த், பின்னர் 2012-ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் விழாவில் பேசும் போது,‘‘அவர் (இராமதாசு) சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. ரசிகர்கள் புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளால் புகையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இப்போது சிகரெட் சாத்தானை தூக்கிப் பிடிக்கும் செயல்களில் நடிகர் விஜய் ஈடுபடக்கூடாது. திரைத்துறையினருக்கும் சமூகப் பொறுப்பு தேவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய விஜய்யின் செயல் பாராட்டத்தக்கது. அது தான் சமூகப் பொறுப்பு.

அதேபோல், புற்றுநோய் மருத்துவமனைக்கு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சன் பிக்சர்சின் செயலும் சமூக அக்கறை தான். இந்த சமூக அக்கறைகள் உண்மையானவையாக இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்