Raja

27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்த அவரது அறிகை: ’’ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 வருடங்களாக சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. மாநில அதிமுக அரசு இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய 19.2.2014 அன்றே முடிவு எடுத்து மத்திய அரசின் கருத்தையும் கேட்டிருந்த நிலையில், ஏறக்குறைய நான்கு வருடத்திற்கும் மேலாக அமைதியாக இருந்த மத்திய அரசு , இப்போது திடீரென்று விடுதலையை நிராகரித்து இருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

Advertisment

குறிப்பாக சிறையில் வாடும் ஏழு பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் “மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசின் கோரிக்கை மீது உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்” என்று கடந்த ஜனவரி மாதமே உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கம்போல் தாமதம் செய்து ,நேற்றையதினம் இப்படியொரு முடிவை குடியரசுத் தலைவர் மூலம் அறிவித்திருப்பது மத்திய அரசு தனக்கு உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பது போல் அமைந்துள்ளது.

குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின்படி, மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் விசாரிக்கும் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்படவில்லை. ஆனாலும் தமிழக அரசின் அமைச்சரவை முடிவிற்கு மத்திய அரசு கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவர் மூலம் மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பது, உள்நோக்கம் கொண்டதாகவும் விடுதலை செய்வதை சிக்கலாக்குவதாகவும் தோன்றுகிறது. பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் பிரச்சினையில், பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும் குழப்பம் ஏற்படுத்துவதிலும், மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

Advertisment

ஆகவே தமிழக அரசின் அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனது கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், 27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’