Skip to main content

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு - திமுக திடீர் ஆலோசனை!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 'By-election to Vikravandi'- DMK advises

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தற்போது இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் துரைமுருகன் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்