''ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைக்க கூடாது''-அர்ஜுன் சம்பத் பேட்டி

publive-image

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், ''இந்த சம்பவத்தை இதுவரை முதல்வர் கண்டிக்கவில்லை. பாஜகவை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இதை கண்டிக்கவில்லை. எந்த அரசியல் கட்சித் தலைவரும் வந்து சம்பவம் நடந்த இடத்தை இதுவரை பார்வையிடவில்லை. இதுவே வேறு மதம் சார்ந்தவர்களுடைய ஒரு வழிபாட்டுத் தளத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்திருந்தது என்றால் இந்நேரம் எல்லா கட்சிக்காரர்களும் ஓடி வந்திருப்பார்கள்.

தமிழகத்தில் கடந்த 15 மாத கால திமுக ஆட்சி முழுக்க முழுக்க சிறுபான்மை ஆதரவு என்கிற பெயரில் மத அடிப்படை வாத இயக்கங்களோடு அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து வருகிறது. இந்துக்களை விமர்சனம் செய்தும், ஆபாசமாக ஆ.ராசா போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளையும் விமர்சித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் இனிமேலாவது தன்னுடைய அணுகுமுறை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைக்க கூடாது'' என்றார்.

kovai
இதையும் படியுங்கள்
Subscribe