Advertisment

நிதி நிறுவன அதிபரின் மகன் கடத்தல்; 1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் சிக்கியது

businessman son incident dharmapuri police investigation team money

தர்மபுரி அருகே, நிதி நிறுவன அதிபரின் மகனை கடத்திச்சென்று, ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய மர்ம கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Advertisment

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மேல் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஷியாம் சுந்தர் (வயது 17). குமாரபாளையத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இன்னும் கல்லூரி தொடங்காததால் வீட்டில் இருந்து வருகிறார். செப். 20- ஆம் தேதி, பாலக்கோடு கடை வீதிக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு ஷியாம் சுந்தர் வெளியே சென்றார்.

Advertisment

இந்நிலையில் அன்று மாலை சிவக்குமாரை அலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் விடுவிப்போம் என மிரட்டி உள்ளார். இதனால் பதற்றமடைந்த சிவக்குமார், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. 10 லட்சம் ரூபாய் தருகிறேன். தயவு செய்து என் மகனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார். இதற்கு மர்ம நபர் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே அவர், பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டனர். டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடத்தல் கும்பலை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.சிவக்குமாருக்கு மர்ம நபரிடம் இருந்து வந்த அழைப்பு, எந்த அலைபேசி டவரில் இருந்து வந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்தனர். பிறகு, சம்பவத்தின்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன்மூலம் மிரட்டல் விடுத்த நபர் பற்றிய பின்னணி தெரிய வந்தது. அந்த நபர் சூளகிரி பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், அவரை சுற்றி வளைத்தனர். செப். 21- ஆம் தேதி மர்ம நபருடன் மேலும் சிலரும் சேர்ந்து கொண்டு ஒரு காரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, காரில் இருந்த சிறுவன் ஷியாம் சுந்தரை பத்திரமாக மீட்டனர்.

சிறுவனை கடத்திச் சென்றதாக 7 பேரை பிடித்துச் சென்று, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் அளித்த 15 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை காவல்துறையினர் கூண்டோடு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார்? பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார்? என்ற முழு விவரமும் இன்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

police dharmapuri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe