
கடந்த 1940 ஆம் ஆண்டு இலங்கைச் சேர்ந்த எழுவாய் பாட்டி என்பவரது வீட்டில் ரஞ்சித் மற்றும் அவரது பெற்றோர் பழனிச்சாமி - மாரியம்மாள் ஆகிய மூவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் ரஞ்சித்திற்கு வயது 15. அப்போது எழுவாய் பாட்டி வீட்டில் ரஞ்சித் ரூ. 37.50 காசு திருடியுள்ளார். பின்பு 1977 -ஆம் ஆண்டு ரஞ்சித் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்த ரஞ்சித் சிறிய பெட்டிக் கடை தொடங்கிய நிலையில், அந்த வியாபாரம் சரியாக போகாமல் நஷ்டமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உணவகத்தில் வேலை, சிலரது வீட்டு வேலை, மூட்டை தூக்குதல் எனக் கிடைக்கும் வேலைகளை எல்லாம் ரஞ்சித் செய்து வந்திருக்கிறார். அதன் பிறகு 80-களின் தொடக்கத்தில் கோவை வந்த ரஞ்சித் அங்கு சிறியதாக கேட்ரிங் சர்வீஸ் தொழிலை ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த தொழில் நல்லமுறையில் படிப்படியாக வெற்றி பெற்று பொருளாதாரமும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்பிறகு அந்த கேட்ரிங் சர்வீஸ் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் ரஞ்சித்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் படுத்த படுக்கையாக இருந்த ரஞ்சித்திற்கு ஒரு நாள், தான் எழுவாய் பாட்டி வீட்டில் திருடிய நிகழ்வு நினைவுக்கு வந்துள்ளது. அதனால் தற்போது தான் திருடிய பணத்தை எப்படியாவது திருப்பி தந்துவிடவேண்டும் என்று ரஞ்சித் எண்ணியுள்ளார். இதற்காக எழுவாய் பாட்டியை தேடவும் தொடங்கியுள்ளார்.
அப்போதுதான் எழுவாய் பாட்டி மற்றும் அவரது பிள்ளைகளும் உயிருடன் இல்லை என்பது தெரிய வருகிறது. இதனால் சற்று யோசித்த ரஞ்சித், பாட்டியின் பேரப்பிள்ளைகளுக்கு அந்தத் தொகையை திருப்பி தர வேண்டும் என்று நினைத்துள்ளார். அதற்காக இலங்கை சென்ற ரஞ்சித், பாட்டியின் பேரப் பிள்ளைகளிடம் தான் அப்போது பாட்டியிடம், எடுத்த ரூ.37.50 காசு பணத்தின் தற்போதைய மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் என்று பேரப் பிள்ளைகளுக்கு ரூ.70 ஆயிரம் பணத்தை கொடுத்திருக்கிறார். மேலும், பாட்டியின் வாரிசுகளில் கடைசியாக பிறந்த செல்லம்மாள் என்ற பெண்மணி மட்டும் தமிழ்நாட்டில் திருச்சிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இதனைத் தெரிந்து கொண்ட ரஞ்சித் உடனடியாக திருச்சி சென்று செல்லம்மாளின் வாரிசுகளுக்கும் ரூ.70 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த அவர்களின் குடும்பத்திற்கு தற்போது ரஞ்சித் பணம் கொடுத்தது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பின்பு எடுத்த பணத்தைத் திருப்பி கொடுத்த மன நிறைவோடு ரஞ்சித் வீடு திரும்பினார். திருடிய பணத்தைப் பல ஆண்டுகள் கழித்து திருப்பி கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.