Businessman jailed for cheating on woman

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள வைரவரபுரத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி முருகேசன் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் நெருக்கமாகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை பேசி, அந்தப் பெண்ணுடன் முருகேசன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

Advertisment

கர்ப்பம் அடைந்த பிறகு, முருகேசனிடம் சென்றஅந்த இளம் பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் முருகேசன் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அப்பெண் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டதன் பேரில், ஊர் மக்கள் பஞ்சாயத்துப் பேசி அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து அந்தப் பெண்ணை முருகேசன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். வேறு வழி தெரியாமல் முருகேசனும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள, பின்னர் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழவில்லை.

அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து, தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அந்தப் பெண், கடந்த 2001 ஆம் ஆண்டில் இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் முருகேசன் தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமக்கு நீதிகிடைக்கக் கோரியும் புகார் அளிதுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

Advertisment

அதன் பிறகு இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (05.03.2021) இந்த வழக்கில் நீதிபதி சாவி அவர்கள்தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார். சிறை தண்டனை கிடைக்கப் பெற்ற முருகேசனை போலீசார் பலத்தப் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.