ADVERTISEMENT

தற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள்!

06:43 PM Feb 25, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


"அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை எடுத்து அரசின் மற்ற நிர்வாகத்திற்குச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காகப் பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25ஆம் தேதி முதல் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்பே அறிவித்தது. இதையும் தமிழக அரசு பொருட்படுத்தாததால், தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி 25ஆம் தேதி காலை போராட்டத்தில் குதித்தனர்.

மக்கள் மத்தியில் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்றைய தினம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. பணிக்கு வராத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி உட்பட 13 பணிமனைகளில் தினமும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள் மாவட்டத்திற்குள்ளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில், அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்களை இயக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி 25ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் பெரும்பாலும் இயங்கியது. பெருமளவு பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிப்பட்டனர். ஓடிய பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த உடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்யத் தொடங்கி விட்டோம். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பணிமனைகளில் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை" என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT