The bus stopped at the restaurant! 24 pound theft

பெரம்பலூர் அருகிலுள்ள மேரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யதேவன். இவரது மனைவி ஜோதி(63). இவர், சென்னையில் உள்ள தனது மகன் சரத்குமார் வீட்டின் கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னை சென்றுள்ளார். பின்னர் மகன் வீட்டிலேயே சில நாட்கள் தங்கியிருந்த ஜோதி, நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து தனது ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி புறப்பட்டு வந்துள்ளார்.

Advertisment

அந்த பேருந்து திண்டிவனம் - விழுப்புரம் இடையில் உள்ள பாதிரிப் புலியூர் என்ற இடத்தில் பயண வழி உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஜோதி பேருந்தில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பிஸ்கட் வாங்கிக்கொண்டு மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்து தனது பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி, கதறி அழுதுள்ளார்.

Advertisment

பின் அதே பேருந்தில் தனது ஊருக்குச் சென்று, அங்கு தனது கணவரை அழைத்துக்கொண்டு மீண்டும் மயிலம் காவல் நிலையத்திற்கு வந்த ஜோதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பேருந்து பயணியிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பயண வழி உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.