Advertisment

மீன் சந்தையாக மாறிய பேருந்து நிலையம் - விலை உயர்வால் விற்பனை மந்தம்!

Bus station turned into a fish market - Sales slump due to high prices

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்றுமுதல் (07.06.2021) சில தளர்வுகளுடன் ஊரடங்குத் தொடரும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார். அதன்படி மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் காய்கறி, மீன் மற்றும் இறைச்சி சந்தைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதிகளவில் கூடுகின்றனர். அதனைத் தொடர்ந்து கரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதைக் கருத்தில்கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் இயங்கும் எனவும், அங்கு மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளித்து நேற்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் காலை 4 மணிமுதல் செயல்பட தொடங்கி எட்டு மணிக்கு நிறைவடைந்தது. இதில் குழுமணி ரோட்டில் இயங்கிவந்த காசி விளாங்கி சந்தையில் செயல்பட்ட 22 மொத்த வியாபார கடைகள் இங்கு போடப்பட்டிருந்தன. இதற்கிடையில் இங்கு சில்லரை விற்பனை இல்லாததால் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காரணமாக கடந்த 15 நாட்களாக செயல்படாமல் இருந்த மீன் சந்தை, தற்போது இன்றுமுதல் செயல்பட தொடங்கியதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் காலை 4 மணிக்குத் தொடங்கிய மீன் சந்தை 8 மணிக்கெல்லாம் முடிவு பெற்றது.

Advertisment

இதுகுறித்து கூறிய மீன் வியாபாரிகள், "தற்போது கடலில் மீன்பிடி தடைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கடல் மீன் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. இன்று மீன் சந்தையில் ஜிலேபி, சுறா, கிழங்கா, கட்லா மீன்களும் மற்றும் இராட்டு, நண்டு ஆகியவையும் விற்பனைக்கு வந்தது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து மீன் விற்பனைக்கு வந்தது" என தெரிவித்தனர். மத்திய பேருந்து நிலையத்தில் மீன் சந்தை போடப்பட்டிருப்பதால் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததால், இங்கு முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

bus stand fish market trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe