
தமிழக அரசு கரோனா தொற்றிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் பொது முடக்கத்தை அமல்படுத்தி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் காலை 10 மணிக்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணியிலிருந்து 10 மணிக்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்கப் பொதுமக்கள் ஒரே இடத்தில் உள்ள காய்கறி மற்றும் மளிகை, இறைச்சி பொருட்களை வாங்குவதற்குக் குவிகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் அனைவரும் செல்வதால் தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சிதம்பரம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், முழு முடக்கம் காரணமாக இயங்காமல் இருக்கும் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகளை அமைத்து பொதுமக்களை சமூக இடைவெளியுடன் அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த காலங்களில் முழு முடக்கத்தின்போது பேருந்து நிலைய வளாகங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு அதில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.