/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_331.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ஆம் தேதி இரவு கடைவீதியில் தொடங்கிய வாக்குவாதம், ஒரு குடியிருப்பிற்குள் இரு தரப்பு இளைஞர்கள் மோதிக் கொள்ளும் பெரும் மோதலாக மாறியது. இந்த சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட 17 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் சில மாதங்களாக குடியில்லாத மல்லிகா என்பவரின் வீடு, 3 பைக்குக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் சில வீடுகள், 3 கார்கள், 4 பைக்குக்கள், ஒரு அரசு பேருந்து, ரோந்து காவல்துறை வாகனம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வடகாடு, கொத்தமங்கலம், புள்ளாண்விடுதி ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு தரப்பில் வடகாடு, கொத்தமங்கலம், மறமடக்கி, அணவயல் உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த 13 பேர்கள் கைது செய்யப்பட்டு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்துள்ளனர். மற்றொரு தரப்பில் புள்ளாண்விடுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் நடப்பதால் மாணவ, மாணவிகள் கொத்தமங்கலம், ஆலங்குடி, கைகாட்டி வரை பெற்றோர்கள் பைக்களில் ஏற்றிச் சென்று அனுப்பி வைக்கின்றனர். மேலும், கீழாத்தூரில் உள்ள அரசு கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகளுக்கு பேருந்து இல்லாததால் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பைக், ஆட்டோக்களில் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ஒரு தரப்பில் 13 பேரை கைது செய்த போலீசார் மற்றொரு தரப்பில் வெளியூரைச் சேர்ந்த ஒருவரை மட்டும் கைது செய்து பிரச்சனைக்கு காரணமானவர்களை கைது செய்யாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால், போலீசார் தரப்பில் இருந்து அனைவரும் விரையில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இரு தரப்பிற்கும் ஆதரவாக ளெியூர்களில் இருந்து பலர் வந்து செல்வதால் மேலும் பிரச்சனைகள் பெரிதாகாமல் இருக்க போலீசார் எடுத்து அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)