
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னை பிராட்வேயில் இருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்த 64 சி என்ற தடம் எண் கொண்ட அரசு பேருந்து வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெள்ள நீரில் சிக்கியது. சுமார் 20க்கும் மேற்பட்ட பேர் பயணித்த அந்த பேருந்து வெள்ளநீரில் சிக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மூலமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் மீட்பு பணி காரணமாக பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்பொழுது மழை வெள்ளத்தில் சிக்கி இருக்கும் பேருந்து மற்றொரு பேருந்தை பயன்படுத்தி மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow Us