ADVERTISEMENT

போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

07:52 AM Aug 24, 2018 | aravindh


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து சுமார் 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், தாம்பரம், வேளச்சேரி, பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்களை லிப்ட் வாகனம் மூலம் இந்த பணிமனை அழைத்து வருவது வழக்கம். இந்த லிப்ட் வாகனத்தை சமீப காலமாக போக்குவரத்து கழகம் நிறுத்தியுள்ளது. இதனால் இந்த பணிமனைக்கு நள்ளிரவு நேரங்களில் பணி முடித்து வரும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்கள் வீடு திரும்ப முடியாமல் இரவு முழுவதும் பணிமனையிலே தங்கியிருந்து பின்னர் அதிகாலை 5 மணி அளவில் இயக்கப்படும் முதல் பேருந்தில் ஏறி வீடு திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பெரும்பாக்கம் பணிமனையில் நேற்று இரவு 11 மணி அளவில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

இதையடுத்து தகவல் அறிந்த உயர்அதிகாரிகள் போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் 2 லிப்ட் வாகனங்கள் இயக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT