Bus conductor assaults school girl in chengalpattu

Advertisment

சில நாட்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்லும் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவ மாணவிகளை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் பேருந்து நடத்துநர் பாபு என்பவர் கடுமையான சொற்களால் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், இது குறித்து கேட்ட சக பயணிகள் மீது கொலை மிரட்டல் விடுப்பது போல் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பேருந்து நடத்துநர் ஒருவர் 10ஆம் வகுப்பு மாணவியை கண்ணத்தில் அறைந்து கடுமையாக தாக்கிய சம்பவம்ஒன்று அரங்கேறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு திருமணமாகி மோனிஷா (15) என்ற மகள் உள்ளார். இவர், மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பேருந்து மூலம் தனது பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று (10-10-23) மாலை மோனிஷாவின் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு வகுப்பை முடித்த மோனிஷா, மாலை 5:30 மணி போல் மாமல்லபுரம் செல்வதற்காக பூஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசலுடன் ஒரு மாநகர பேருந்து வந்தது. அந்த பேருந்தில் ஏறிய மோனிஷா, நிற்க கூட இடம் இல்லாத காரணத்தால் பேருந்து படியில் நின்று கொண்டு தவித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து, அந்த பேருந்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாகவே திடீரென்று பேருந்து இயக்கப்பட்டு எலெக்ரானிக் கதவுகள் மூடப்பட்டது. இதனால் பயணிகள் கூட்டமாக பேருந்து படியில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஆத்திரமடைந்த பேருந்து நடத்துநர், படியில் நின்று கொண்டிருந்த மோனிஷாவின் கன்னத்தில் 3 முறை அறைந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால், வலியால் அவதிப்பட்ட மோனிஷா நடத்துநரின் செயல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மோனிஷாவின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், மாணவியை தாக்கிய நடத்துநர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.