A bus collided with a lorry. Two passed away

சென்னையில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தேனி மாவட்டம், போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். மேலும் இவருடன் மாற்று ஓட்டுநராக போடி பகுதியைச் சேர்ந்த சுருளி முத்து என்பவர் வந்தார்.

Advertisment

அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை எதிரே வந்துகொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்துக்கு முன்னால் இரும்பு பட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி திடீரென பிரேக் அடித்தது. இந்நிலையில், ஆம்னி பேருந்து லாரி மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிவா மற்றும் மாற்று ஓட்டுநர் சுருளி முத்து இருவரும் சம்பவ இடத்திலேயே இரும்பு பட்டைகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த ஒரு சில நொடிகளில் ஆம்னி பேருந்தின் பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisment

அந்த பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.