Skip to main content

வெள்ளைக் கொம்பன் ஜல்லிக்கட்டு காளை கண்ணீரோடும் மரியாதையோடும் அடக்கம்!

Published on 12/10/2021 | Edited on 13/10/2021

 

h

 

தமிழகத்தில் வாடிவாசலில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப் பிராணிகளாக, குழந்தையாகத் தான் வளர்க்கப்படுகிறது. வாடியில் அவிழ்த்துவிடப்படும் காளைகள் யாரிடமும் பிடிபடாமல் வந்தால் அதற்கான மரியாதை அதிகரிக்கும். அதற்காகவே கணக்குப் பார்க்காமல் பராமரிப்பு செலவு செய்கின்றனர். இப்படித்தான் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏவும் கொம்பனைச் செல்லமாக வளர்த்தார். அந்த காளை வாடி வாசலிலேயே உயிரிழந்தது. கொம்பனைத் தனது ராப்பூசல் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்து வழிபட்டு வருகிறார்கள். 

 

அடுத்து வந்த வெள்ளைக் காளைக்கு வெள்ளைக் கொம்பன் என்று பெயரிட்டு வளர்த்தனர். வாடி வாசலில் சீறிப்பாய்ந்து வெளியேறுவதால் மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஏனோ நீண்ட காலம் நீடிப்பதில்லை. வெள்ளைக் கொம்பனும் வயது முதிர்வால் திங்கள் கிழமை உயிரிழந்தது. செவ்வாய்க்கிழமை அரசியல்வாதிகள் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் தீவிரமாக இருந்த போது வெள்ளைக் கொம்பனுக்காகக் கண்ணீர் வடித்த மாஜி விஜயபாஸ்கர் குடும்பத்தோடு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். 

 

மாலைகள், வேஷ்டிகள் என அஞ்சலியில் ஏராளம். மாஜி அஞ்சலி செலுத்திய பிறகு ஊர்வலமாகத் தூக்கிச் சென்று தங்கள் தோட்டத்திலேயே வெள்ளைக் கொம்பனையும் அடக்கம் செய்தனர். கொம்பனைத் தொடர்ந்து வெள்ளைக் கொம்பனும் உயிரிழந்தது வேதனைப்பட வைத்துள்ளதாகக் கூறியுள்ளார் மாஜி அமைச்சர். தமிழர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல உயிரிழந்தாலும் உரிய மரியாதை கொடுப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
 

h

 

 

 

சார்ந்த செய்திகள்