Skip to main content

கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்

இரு அணிகளுக்குமே கொள்கை என்பது இல்லை. மீதமுள்ள நான்காண்டு ஆட்சிக்காலத்தில் முடிந்தவரை கொள்ளையடிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கம். இதற்காக மட்டுமே இணைப்பு. இதற்கான பேரத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் கூட அமைச்சர் பதவிகளை அதிகமாக பெறுவதற்கான உத்தி தானே தவிர வேறொன்றுமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டதால் தவித்து நிற்கும் மாணவர்கள், மேகேதாட்டு பகுதியில் காவிரியில் குறுக்கே கர்நாடகம் தாராளமாக அணை கட்டிக் கொள்ளலாம் என்று பினாமி அரசு அளித்த ஒப்புதலால் எதிர்காலத்தை இழந்து நிற்கும் விவசாயிகள் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கடந்து நாளிதழ்களின் முதல் பக்கச் செய்தியாக இடம்பெற்றிருக்கிறது இரு அணிகளின் இணைப்பு முயற்சி.

பினாமி அணியும், அடிமை அணியும் இணைவதால் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 2 சேருவதையும், ஊழலின் அளவில் 40% அதிகரிக்கப் போவதையும் தவிர வேறு என்ன அரசியல் மாற்றமும், சமூக மாற்றமும் நிகழ்ந்து விடப் போகிறதென்று தெரியவில்லை. நேற்று வரை பகையாளிகளாக முறைத்தவர்கள் இன்று பங்காளிகளாக நெருங்குகிறார்களாம்... நாளை கைக் கோர்ப்பார்களாம்... நாளை மறுநாள் முதல் ஊழலைத் தொடர்வார்களாம். இதையெல்லாம் கேட்கும் போது‘‘வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை’’ என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. 

‘‘இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தவறு செய்கிறார்கள் & தேவனே இவர்களை மன்னித்து விடும்’’ என்பது பைபிள் வாசகம். ஆனால், அதிமுக இணைப்பு என்ற பெயரில் நடத்தப்படும் கூத்துக்களைப் பார்க்கும் போது ‘‘இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரிந்தே தவறு செய்கிறார்கள் & மக்களே இவர்களை தண்டித்து விடும்’’ என்று தான் வேண்டத் தோன்றுகிறது. பினாமி அணியும், அடிமை அணியும் இணைவதற்கு ஏராளமான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாகவும், அவை ஏற்கப்பட்டதால் தான் இணைப்பு முயற்சி கைகூடி வருவதாகவும் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுகின்றன.

ஆனால், இவர்கள் இருவரும் எதற்காக பிரிந்தார்கள்... எதற்காக இப்போது இணைகிறார்கள் என்பது தமிழகத்தின் ஏதோ  ஒரு மூலையில் வாழும் மக்களுக்குக் கூட மிகவும் நன்றாகத் தெரியும். இதற்கெல்லாம் காரணமான அந்த மூன்றெழுத்து ‘கொள்கை’ அல்ல... கொள்ளை, ஊழல், பதவி ஆகியவை தான் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. அதிமுக கடந்த பிப்ரவரி மாதம் உடைந்து, இப்போது சேரும் வரையிலான ஆறு மாதங்களில் மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் இந்த இரு அணிகளும் எவ்வாறு செயல்பட்டன என்பதை தமிழகமும், தமிழக மக்களும் மிகவும் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாத உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும்,  அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். ஆனால், தமிழகத்தில் வறட்சியால்  எந்த உழவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை; சொந்தப் பிரச்சினையால் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்து அவர்களை இழிவுபடுத்தியது பினாமி அரசு. ஐந்து ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து அவசர, அவசரமாக  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை வாங்கி கொண்டாடியது பினாமி அரசு. 

அடிமை அணியோ அதிமுக இணைப்பு, தங்களுக்கு பதவி என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தையையும்  இதுவரை உதிர்க்கவில்லை. சொந்த ஊரில் குடிக்க நீரின்றி மக்கள் தவித்த போது, இராட்சத மோட்டார்களை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சியவர் தான் இந்த அணிக்கு தலைவர். பின்னர் ஊர்மக்களுடன் நடந்த பேச்சுக்களின் போது அவர்களிடம் கிணற்றை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு, அடுத்த நாளே பினாமி பெயருக்கு கிணற்றையும், அதையொட்டிய நிலங்களையும் மாற்றிக் கொண்ட பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் அவர். சென்னையில் குடிநீருக்காக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த அவர், அந்த போராட்டத்தால் நமக்கு பதவி கிடைக்காத சூழல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அந்த போராட்டத்தை இரு முறை ஒத்திவைத்து, பின்னர் நிரந்தரமாக கைவிட்ட ‘மக்கள் தொண்டர்’ தான் அடிமை அணித் தலைவர்.

காவிரி, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட  வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.  ஆனால், இணைப்பு   பற்றி விவாதிப்பதற்காக தில்லியிலும், சென்னையிலுமாக மாறி மாறி தொடர்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் இணைப்பு தான் இனி மக்களுக்கு சோறு போடப்போகிறதா? என்பது தான் விளங்கவில்லை.
பகையாளிகளாக இருந்து பங்காளிகளாக மாறி விட்டதாகக் கூறும் இந்த இரு பிரிவினரும் இதுவரை ஒருவர் மீது ஒருவர் வீசிய சேறுகளை எவ்வாறு துடைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது தான் புரியவில்லை. கடந்த ஆகஸ்ட் 3&ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அடிமை அணித் தலைவர், ‘‘ தமிழ்நாட்டில் நடப்பது ஊழல் ஆட்சி என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்’’ என்று கூறினார். அதன்பின்னர் ஆகஸ்ட் 7&ஆம் தேதி விருதுநகரில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய அவர் ,‘‘ தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக நடிகர் கமலஹாசன் கூறியது முற்றிலும் சரி தான்’’ என்றார். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்த அமைச்சர் ஒருவர்,‘‘ஊழல் பற்றி பேச பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை அவர் வகித்த துறையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டுக்கு சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியது யார் அவர் பதில் சொல்லட்டும்’’ என்றார். இப்போது யார் ஊழலுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு இரு அணிகளின் தலைவர்களும் விளக்கிக் கூற வேண்டும்.

அதற்கு முன்பாக மே 23&ஆம் தேதி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அடிமை அணித்தலைவர்,‘‘ முதலமைச்சரும் அமைச்சர்களும் காலையில் நல்ல வாயிலும், மாலையில் நாற வாயிலும் மாறி மாறி பேசி வருகின்றனர். யாரும் பொறுப்பாக பேசுவதில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தவில்லை. உள்ளாட்சி தேர்தலில் இந்த செயல்படாத அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’’ என்று கூறியிருந்தார்.  அப்படிப்பட்டவர் இரு அணிகளின் இணைப்பு குறித்து எதிர் அணியுடன் எந்த வாயில் பேசினார் என்பதையும்  உள்ளாட்சித் தேர்தலில்  இந்த அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வாரா? என்பதையும் விளக்க வேண்டும்.

இரு அணிகளுக்குமே கொள்கை என்பது இல்லை. மீதமுள்ள நான்காண்டு ஆட்சிக்காலத்தில் முடிந்தவரை கொள்ளையடிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கம். இதற்காக மட்டுமே இணைப்பு. இதற்கான பேரத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் கூட அமைச்சர் பதவிகளை அதிகமாக பெறுவதற்கான உத்தி தானே தவிர வேறொன்றுமில்லை. இதையெல்லாம் நன்றாக உணர்ந்துள்ள மக்கள் இவர்களுக்கு வெகுவிரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

சார்ந்த செய்திகள்