
வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டில் அடி பம்பு மறையும் வகையில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் நிலையில் அதற்கான தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் அமைக்கப்படும் பொழுது பயன்பாட்டிலிருந்த அடி பம்பு பயன்படுத்த முடியாத அளவில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த சுவரை அகற்றிவிட்டு போர்வெல்லை மூடி விட்டு சென்றனர். அண்மையில் இதேபோல் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் போது சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பொருட்படுத்தாமல் டயர்கள் சாலையில் புதையும்படி சாலை போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.