Skip to main content

இரும்பாலை முன்னாள் ஊழியர் வீட்டில் கைவரிசை; 82 பவுன் நகைகள், 8.50 லட்ச ரூபாய் திருட்டு

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Burglary house  ex-Irumbalai employee

 

சேலம் அருகே இரும்பாலை முன்னாள் ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 82 பவுன் நகைகள், 8.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     

 

சேலம் இரும்பாலை மோகன் நகரைச் சேர்ந்தவர் மணியன் (65). இரும்பாலையில் முதுநிலை தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன், மகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். மணியன் தற்போது காக்காபாளையம் பகுதியில் புதிதாக ஒரு வீட்டைக் கட்டி வருகிறார். டிசம்பர் 26 ஆம் தேதி கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக தனது மனைவியை அழைத்துக் கொண்டு காக்காபாளையம் சென்று இருந்தார். மாலையில் இருவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 82 பவுன் நகைகள், 8.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. மர்ம நபர்கள் ஆளில்லா நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசையைக் காட்டியுள்ளனர்.    

 

இதுகுறித்து மணியன் இரும்பாலை காவல்நிலையத்தில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிகழ்விடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் துறையினர் நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களைச் சேகரித்தனர். வீட்டுக் கழிப்பறை பயன்டுத்தப்பட்டு இருந்தது. மின்விசிறி ஓடிக்கொண்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருட வந்த ஆசாமிகள் சாவகாசமாக  நகை, பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. நிகழ்விடத்தைச் சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்