ADVERTISEMENT

மூட்டை மூட்டையாக கழிவுநீர் குளத்தில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி..? 

12:06 PM Jan 07, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒருவேளை சாப்பாட்டுக்கூட வழியில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இன்றும் நம்நாட்டில் இருக்கின்றன. ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்களும் இருக்கின்றன. இந்நிலையில், மூட்டை மூட்டையாக அரிசியை கொண்டுவந்து கழிவு நீர் கலக்கும் குளத்தில் கொட்டியிருப்பது பலரையும் வேதனைபட செய்துள்ளது.

மயிலாடுதுறையை அடுத்த கிராமம் சோழம்பேட்டை. அந்த ஊராட்சியில் சுமார் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் விவசாய தினக்கூலிகளாகவும், ரேஷன் பொருட்களை நம்பியே ஜீவனம் செய்பவர்களாவும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக அங்குள்ள ரேஷன் கடையில் புழுத்த, தரமற்ற, மனிதர்கள் உண்ண முடியாதபடியான அரிசி, பருப்புகளை ரேஷன் கடையில் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்களோடு இனைந்து மார்க்சிஸ்ட் கம்யூனாஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், சோழம்பேட்டை மாரியம்மன் கோயில் குளத்தில் 50க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை கிழித்து தண்ணீரில் கொட்டியும், மூட்டை மூட்டையாக தூக்கிவீசியும் உள்ளனர். குப்பைகளாலும், கழிவுகளாலும் அசுத்தமான அந்தக் குளத்தில் மூட்டை, மூட்டையாக அரிசி கொட்டப்பட்டு மிதந்தபடி இருந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள், ‘இது ரேஷன் அரிசிபோல் உள்ளது. இது எப்படி குளத்திற்கு வந்தது. கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை கொண்டுவந்து கொட்டியது யார், ஏன் குளத்தில் கொட்டப்பட்டன’ என கேள்வியுடன் குற்றஞ்சாட்டை முன்வைக்கின்றனர்.

மேலும், கழிவுநீர் குட்டையில் கொட்டப்பட்டுள்ள அரிசி குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு குளத்தில் கொட்டி இருந்த அரிசி மூட்டைகளில் சிலவற்றை கரையில் எடுத்துப் போடச் சொல்லி பார்வையிட்டு திகைத்துப் போனார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "அரிசி தண்ணீரில் நனைந்ததால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. நனையாத அரிசியை ஆய்வுக்கு அனுப்புகிறோம். பின்புதான் அது ரேஷன் அரிசியா, அல்லது வேறு எங்கிருந்தாவது வந்ததா என்பது தெரியவரும். ரேஷன் அரிசியாக இருந்தால் மக்களுக்கு விநியோகம் செய்யாமல் கொட்டப்பட்டதா, அல்லது ரேஷன் கடைகளில் கெட்டுப்போன அரிசி பொதுமக்களுக்கு கொடுக்க முடியாதததால் அதை என்ன செய்வது என்று தெரியாமல் குளத்தில் கொட்டினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

"பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகளை குளத்தில் கொட்டி சென்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். மேலும் அப்பகுதி மக்கள், ‘சமீப நாட்களாக ரேசன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. வேளாங்கண்ணி அடுத்துள்ள ஒரு கிராமத்தில் லாரிகளில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக ஏற்றியபோது பொதுமக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்ததோடு சரி, அவர்களுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்கிற ஆணிவேரை இன்னும் கண்டுபிடிக்காமல் கிடப்பிலே இருக்கிறது’ என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT