Skip to main content

வடிவேலு பாணியில் காக்கிகளை ஏமாற்றிய புல்லட் நாகராஜ்! - சுவாரஸ்ய சம்பவம்!

nagaraj


துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள மேல் மங்களத்தை சேர்ந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் கடந்த ஒரு வாரமாக மதுரை மத்திய சிறை எஸ்.பி.ஊர்மிளா, இன்ஸ்பெக்டர் மதனகலா, தேனி கலெக்டர் பல்லவி, எஸ்.பி.பாஸ்கரன் ஆகியோரை கொலை செய்ய போவதாக ஆடியோ மூலம் மிரட்டி வந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இதைத்தொடர்ந்து, தேனி எஸ்.பி., புல்லட்டை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை பெரியகுளம் நகரில் டூவிலரில் வரும் போது ஏ.டி.எஸ்.பி. சுருளிராஜன், இன்ஸ்பெக்டர் மதனகலா, எஸ்.பி.போலீசார் காசிராஜன் ஆகியோர் மடக்கி பிடித்து புல்லட் நாகராஜனை கைது செய்து அவனிடம் இருந்து கள்ளநோட்டு, பொம்மை துப்பாக்கி, கத்தி, அடையாள அட்டைகள் உள்பட பல பொருட்களை கைபற்றினார்கள்.
 

nagaraj


தொடர்ந்து காக்கிகளின் அதிரடி விசாரணைக்கு பிறகு புல்லட் மேல் வழக்குப்பதிவு செய்து பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டதின் பேரில் ரவுடி புல்லட்டை 15 நாள் திருச்சி சிறையில் அடைக்க நீதிபதி அருண்குமார் உத்திரவிட்டார். அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்லட்டை திருச்சி சிறையில் அடைத்தனர். இது சம்மந்தமாக இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்ட போது...

ஆடியோ மூலம் அந்த புல்லட் நாகராஜன் பேசியதிலிருந்தே அவனை வீடு உள்பட பல இடங்களில் தேடி வந்தோம். அதை கண்டு அவனும் லோக்கலுக்குள்ளையே தான் சுத்திகிட்டு இருந்தவன் திடீரென பெரிய குளத்திற்குள் நுழைந்த போது மடக்கி பிடித்தோம். அவன் ஒன்னும் பெரிய ரவுடி கிடையாதுங்க.. டம்மி பீஸ் மிரட்டனாலே ஒடி போய்விடுவான் அப்படிபட்டவன் அதிகாரிகளின் பவர் தெரியாமல் கொலைமிட்டல் விட்டதின் பேரில் தான் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

இவன்மேல் திண்டுக்கல்லில் தான் முதன் முதலில் 1996ல் வழக்குபதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து தான் தேனி, பெரியகுளம், போடி, பழனி, திருப்பூர், மதுரை என நடப்பு ஆண்டு வரை 71 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாமே வழிப்பறி, திருட்டு, கொள்ளை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
 

nagaraj


இது சம்மந்தமாக நாம் மேலும் விசாரித்த போது, புல்லட் வழக்கில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடந்து இருக்கிறது. கடந்த 2003ம் ஆண்டில் வழக்கு எண் 224 படி ஜெயமங்களம் காவல் நிலையத்தில் இந்த புல்லட் தப்பி ஒடி விட்டதாக வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அது எப்படி நடந்திருக்கிறது என்றால் ’மருதமலை திரைப்படத்தில் அர்ஜுனும், வடிவேலும் ஒரு குற்றவாளியை டூவிலரில் கோர்ட்டுக்கு அழைத்துச்செல்லும் போது அம்மாவை பார்க்க வேண்டும் என கூறி அந்த குற்றவாளி வீட்டுக்கு அழைத்துச்செல்வார்கள் பின்னர் வீட்டிற்குள் சென்ற அந்த குற்றவாளி தப்பித்து போய்விடுவான்’.

அதுபோல தான் ஒரு வழக்கு சம்மந்தமாக மதுரை சிறையில் இருந்த புல்லட்டை பெரியகுளம் கோர்ட்டுக்கு இரண்டு போலீசார் அழைத்து வந்துள்ளனர். அதன் படி அந்த போலீசாரும் புல்லட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி விட்டு திரும்ப போகும் போது, ’புல்லட்டோ மேல்மங்களம் வீட்டில் உள்ள தனது தாயை பார்க்க வேண்டும் என அடம்பிடித்து இருக்கிறான். அதன் அடிப்படையில் அந்த இரண்டு காக்கிகளும் மனிதாபிமான அடிப்படையில் விதி முறைகளை மீறி புல்லட்டை வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் அம்மாவை பார்த்து விட்டு வரச்சொல்லி விட்டு வெளியே உட்கார்ந்து இருந்தார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புல்லட் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டான்’.

இதனால், அந்த இரண்டு காக்கிகளையும் சஸ்பெண்ட் செய்து விட்டனர். இப்படி காக்கிகளிடமே ஏமாற்றி தலைமறைவாகி இருக்கிறான். இப்படிப்பட்ட புல்லட் காவல்நிலையத்தில் இருந்தும் தப்பி ஓடி விடுவான் என்ற பேச்சும் பரவலாக எதிரொலித்து வந்தது. அப்படி இருந்தும் காக்கிகள் காவல் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு போட்டு வழக்குப்பதிவு செய்து பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். அதன் பிறகு திருச்சி சிறையில் புல்லட் நாகராஜனை அடைத்தனர். இப்படி பிரபல ரவுடி புல்லட்டை காக்கிகள் மடக்கி பிடித்து கைது செய்ததை கண்டு போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளோடு நகர மக்களும் வியாபாரிகளும் காக்கிகளை பாராட்டி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்