Skip to main content

'இல்லை... இல்லை... என்று சொல்வதற்கு ஒரு பட்ஜெட்டா?' - முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
nn

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம் தான் இடைக்கால பட்ஜெட்டில் தெரிகிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்புகளை எதிர்பார்த்த மக்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. சாதாரண, சாமானிய, நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் ஏதுமற்ற அறிக்கையை வாசித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். எடை போட்டு பார்க்க எதுவும் இல்லாத அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டதாக பொய்யான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

nn

உழவர்களின் மிக முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளனர். இல்லை இல்லை என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் இல்லா நிலை பட்ஜெட்டாகவே உள்ளது. தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்த ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்துவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்