Skip to main content

தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்: விஜயகாந்த்

Published on 15/03/2018 | Edited on 15/03/2018


 

தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழக அரசின் தற்போதைய வருவாய் 1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியாக உள்ளது. ஆனால் ஏற்கனவே 3.55 லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசு கடனில் தத்தளிக்கும் இந்த நேரத்தில், இன்றைக்கு அறிவிக்கும் தமிழக அரசு பட்ஜெட், பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கிறது. வருவாயைவிட கடன் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் பல திட்டங்களுக்கு, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத கண்துடைப்பு நாடகமாகவே தெரிகிறது. சென்னை வெள்ளத்தடுப்புக்கு 2 ஆயிரம் கோடி, ஜெயலலிதா நினைவகம் அமைப்பதற்கு 20 கோடி, பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி, சுகாதாரத்துறைக்கு 11 ஆயிரத்து 638 கோடி, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு 172 கோடி, மருத்துவ காப்பீட்டுக்கு 1,361 கோடியும், 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவது எனவும், வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு 520 கோடி, காவல்துறை மேம்பாட்டிற்கு 7 ஆயிரத்து 877 கோடி, சத்துணவு திட்டத்திற்கு 1,747 கோடி, மகப்பேறுக்கு திட்டத்திற்கு 18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு 490 கோடி, என மேலும் பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கிய தமிழக அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்துவது தமிழகத்தில் எப்படி சாத்தியமாகும். இந்த பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் கடன்சுமை மென்மேலும் அதிகமடையுமே தவிர, இந்த பட்ஜெட்டால் தமிழகம் வளர்ச்சியடையாது.
 

    சென்ற நிதி ஆண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தற்போது பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகவுமே இந்த பட்ஜெட் அறிவிப்பு உள்ளது.
 

    இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதை பற்றியோ, மழைநீர் சேகரிப்பு, விவசாயம், நெசவுத்தொழில் மேம்பாட்டிற்கோ, மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகள் அமைப்பதற்கோ, இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிகோ என்ற எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் இந்த பட்ஜெட் அறிவிப்பில் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தையும், கவலையையும் தருகிறது. மொத்தத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள் “மக்களின் கண்களை மறைத்து மாயவித்தைகளை காட்டுகின்றனவோ” என நினைக்க தோன்றும் பட்ஜெட்டாகவே தேமுதிக கருதுகிறது. மேலும் 

“கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு” 

என்ற வள்ளுவரின் வாக்கு பலிக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்