அமைதியே சமாதானம். அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு பாராட்ட வேண்டும். புலால் உண்ணல் கூடாது என்பது புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை. கௌதம புத்தரின் அடியொற்றிவந்த புத்த பிட்சுக்கள் நாடு முழுவதும் உள்ளனர், காரணம் உலகம் முழுவதும் புத்த மதம் பரவியதே.

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் -புளியாங்குடி சாலையின் வழியிலுள்ள வீரிருப்பு கிராமத்தின் காட்டுப்பகுதியில் ஜப்பானைச் சேர்ந்த புத்த பிட்சுக்கள் புத்தருக்காக கடந்த 12 வருடங்களுக்கு முன்பு புத்தர் ஆலயம் ஒன்றை அமைத்தனர்.
புத்தரின் கொள்கையை பரப்பவும் அங்கு வழிபாடுகள் நடத்தவும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த பிட்சுகள் அங்கு உள்ளனர். இந்நிலையில் அண்மையில் புத்தர் கோவிலில் 100 அடி உயரம் கொண்ட புத்த கோபுரம் அமைக்கப்பட்டு மார்ச் 4 அன்று திறக்கப்பட உள்ளது. அதன் பொருட்டு புத்த பிட்சுக்களான நிப்போசன் மியோ ஹொஜி, இந்த அமைப்பின் தென்னிந்திய தலைவரான இஸ்தானி ஜி, புத்தர் கோவிலின் மேனேஜிங் டிரஸ்டி லீலாவதி மற்றும் கொரியா நாட்டு புத்த துறவிகள் என திரளானோர் புத்தரின் அஸ்தியோடு சங்கரன்கோவில் நகரில் ஊர்வலமாக வந்தவர்கள் சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பு பிரார்த்தனை வழிபாடு செய்தனர். பின்னர் புத்தர் அஸ்தி வீரிருப்பின் புத்தர் கோவிலின் திறக்கப்பட உள்ள புத்த கோபுரத்தில் வைக்கப்படுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது.

கோபுரத்தில் அஸ்தி வைக்கும் விழா தினமான மார்ச் 4 அன்று புத்த துறவியான நிப்பொன்சன் மியா ஹொஜி மற்றும் தலைமை ஏற்பதற்காக இந்தியாவிற்கான மங்கோலிய தூதரான டெல்லியின் கன்பொல்டு, தலைமை புத்தபிக்கு ஓகோனோகி போன்றவர்களோடு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சுமார் 300க்கும் மேற்பட்ட புத்தபிக்குகள் வந்திருந்தனர். கோபுரத்தில் புத்தரின் அஸ்தி வைக்கப்படுவதற்கு முன்பாக புத்த பிக்குகள் பஜனைப் பாடல்கள் பாடினர். பின்னர் புத்த பிக்குகளின் மங்கள ஒலி ஒலிக்க, புத்தரின் அஸ்தி கலசம் 100 அடி உயரத்திலிருக்கும் கோபுரத்தில் வைக்கப்பட்டது. தலைமை உரையாகப் பேசிய புத்த பிக்குனியும் புத்தர் கோவிலின் டிரஸ்டியுமான லீலாவதி, இந்த புத்தர் ஆலயம் இங்குள்ள தனி நபர் ஒருவர் உலக அமைதியின் பொருட்டுக் கட்டுவதற்கு உதவினார். தேசம் சுதந்திரமடைந்த பின்னர் பிரதமர் நேருஜியின் அறிவுரைப்படி பீகாரில் பிரக்யகிரி என்கிற மலைப்பகுதியின் நாத்வீர் பகுதியில் புத்தர் ஆலயம் கட்டப்பட்டது. பின்பு தேசத்தின் பிற மாநிலங்களின் 6 பகுதிகளில் அரசு உதவியோடு உலக அமைதி புத்தர் கோபுரம் அமைக்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து இந்தியாவிற்கான மங்கோலிய நாட்டுத் தூதரான கன்பொல்டு குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் தன் பேச்சில், மங்கோலியாவில் புத்தர் ஆலயம் ஒரு சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து வந்துள்ளோம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே மங்கோலியாவில் புத்த மதம் பரவ ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்ல இந்தியாவின் மூலமாக மங்கோலியர்கள் புத்தரின் பெருமையை உணர்ந்து கொண்டனர். மங்கோலியாவில் 6வது 7வது நூற்றாண்டிலேயே புத்த பகோடா நிறுவப்பட்டுவிட்டது. அது சமயம் அந்த வழியாக வந்த சைனிஷ் டிராவலர் ஒருவரும் இங்கு புத்தம் எப்படி வந்தது என்று அறிந்து கொண்டார். குறிப்பாக இந்திய மொழியாக அறிந்து கொண்டார். இரண்டு வருடம் முன்பு மங்கோலியா வந்த பிரதமர் மோடி அவர்கள் புத்தரின் சிலையை அங்குள்ள படைப்பாளர்களுக்கு கொடுத்து உதவினார். அத்துடன் புத்தரின் அனைத்து போதனைகளையும் இங்குள்ளவர்கள் பின்பற்றி இந்த பகோடாவை நிறுவியது மகிழ்ச்சி. விவேகானந்தரின் போதனை மற்றும் புத்தரின் சிந்தனையையும் நாம் பின்பற்றுவோமேயானால் உலகம் அமைதியாகலாம் என்கிறார்.
ஒரு சிறிய கிராமத்திலமைந்த பிரம்மாண்ட புத்தர் கோவிலின் உலக அமைதிக் கோபுரத்தில் அஸ்தி வைக்கும் விழா, முழுக்க முழுக்க வெளிநாடுகளின் பௌத்த பிக்குகளுடன் கிராமத்து மக்களும் கலந்து கொண்டது மாறுபட்ட விழாவாகப் பார்க்கப்பட்டதோடு நகரவாசிகளையும் அதன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.