bsp Armstrong case Congress executive arrested

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் அளித்த தகவலின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமன் தொழில் நிறுவனங்களில் இருந்து பழைய இரும்புகளை வாங்கி அதனை மறுவிற்பனை செய்து வரும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.