/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ins-art_21.jpg)
பி.எஸ். 4 ரக வாகனங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி பி.எஸ். 4 ரக இன்ஜினை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் சுற்றுச்சூழல் நலன் கருதி பி.எஸ்.5 ரக இன்ஜின்கள் விற்பனைக்கு வர ஆரம்பித்தால் பி.எஸ். 4 ரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு ஏப்ரல் மாதம் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு பி.எஸ். 4 ரக இன்ஜின்கள் கொண்ட வாகனங்களை வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் பதிவு செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “சென்னையில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பி.எஸ். 4 ரக வாகனங்கள் விதிகளை மீறிப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக அரசு தரப்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சென்னை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் பொன். செந்தில்நாதன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி சென்னை தெற்கு மண்டலத்தில் உள்ள சென்னை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் என சுமார் 357 வாகனங்கள் பி.எஸ்.4 ரக வாகனங்கள் 2020ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நாட்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியானது போக்குவரத்துத்துறையின் இணையதளத்தை ஹேக் செய்து மோசடி நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் பொன். செந்தில்நாதன் கண்டுபிடித்துள்ளார். அதாவது பி.எஸ். 4 ரக வாகனங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பொழுது அலுவலர்களின் பயனர் முகவரி, கடவுச்சொல்லை (யூசர் ஐடி, பாஸ்வேர்ட்) பயன்படுத்தி ஏப்ரல் 2020க்கு முன்பாகவே வாகனங்களை எல்லாம் பதிவு செய்தது போன்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி யூசர் ஐடி, பாஸ்வேர்டு தொடர்பாகவும், எவ்வாறு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாகவும் வாகன விற்பனையாளர் பூபதி என்பவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்காக போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் உடந்தையாக இருந்த 8க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று எத்தனை பி.எஸ். 4 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணையைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் நாளை (06.06.2025) வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)