மேட்டூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை, சித்தப்பா மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்தஇளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சதீஸ்குமார் (35). வெல்டிங் தொழிலாளி. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவருடைய மனைவி, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். சதீஸ்குமாரின் வீடு அருகே அவருடைய சித்தப்பா வீடு உள்ளது. இவருக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு பக்கத்திலேயே அண்ணன் குடும்பத்தினர் உள்ளதால் அவர்களை நம்பிய சதீஸ்குமாரின் சித்தப்பா குடும்பத்தினர் மகளை வீட்டிலேயேவிட்டுவிட்டு கடந்த வாரம் வெளியூர் சென்றிருந்தனர். வீடு திரும்பி வந்து பார்த்தபோது, தனியாக இருந்த தனது மகளை சதீஸ்குமார் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், இதுகுறித்துமேட்டூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, விவகாரம்காவல்துறை வரை சென்றதை அறிந்த சதீஸ்குமார் திடீரென்று தலைமறைவானார். இந்நிலையில் சதீஸ்குமார் மே 23 ஆம் தேதி குஞ்சாண்டியூர் பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.அதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். சதீஸ்குமார் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றஉத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தங்கை உறவுமுறை கொண்ட மனநலம் பாதித்த பெண்ணை அண்ணன் மகனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.