
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கைலாசகிரி பகுதியில் வசித்துவருபவர் லோகேஸ்வரன். அவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினர் கைலாசகிரி மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். தங்களுடன் அவர்களது குழந்தைகளான 9 வயது ஜஸ்வந்த், 7 வயது பிரீத்தாவையும் அழைத்துச் சென்றிருந்தனர். மலைப்பகுதிக்குச் சென்ற லோகேஸ்வரன், அங்குள்ள பாறையின் மீது அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது அருகில் அவரது மனைவியும் இருந்துள்ளார். அவர்களது மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் பிரீத்தா ஆகியோர் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரீத்தா குளத்து நீருக்குள் வழுக்கி விழுந்துள்ளார்.
தங்கையைக் காப்பாற்ற அண்ணன் ஜஸ்வந்த் முயற்சித்துள்ளார். அந்தச் சிறுவனாலும் முடியாமல் இருவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களின் சத்தத்தைக் கேட்ட அவர்களது தந்தை லோகேஸ்வரன் ஓடிச்சென்று குளத்தில் குதித்து குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லையாம். உதவிக்கு கூட யாருமில்லாததால் போலீசாருக்குத் தகவல் தந்துள்ளனர். அந்த தகவலின் பேரில் உமராபாத் காவல்துறையினர், ஆம்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு, சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவரையும் சடலமாக மீட்டனர்.

மலைப்பகுதியிலிருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால், காவல் உதவி ஆய்வாளர் காந்தி, பிரீத்தா உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தோள் மீது சுமந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றிவைத்தார். மற்றொரு சடலத்தைக் காவலர்களும் அங்குள்ள சிலரும் டோலி கட்டி தூக்கி வந்தனர். இரண்டு சடலங்களையும் கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.