Brother passes away police arrested his sister in namakkal

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (53). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு தனபால் என்ற ஒரு மகன் இருக்கிறார். பாண்டியன், மணப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கீழ் பாலப்பட்டியில் அவருடைய தாயார் வரதம்மாளுடன், அவருடைய அக்காள் ஷியாமளா வசித்து வருகிறார்.

Advertisment

கடந்த சில நாள்களுக்கு முன்பு, வரதம்மாள் திடீரென்று உயிரிழந்தார். ஜோதிடர் கூறியதன் பேரில், பாண்டியன் தாய் வீட்டில் தங்கிதினமும் விளக்கேற்றி வந்துள்ளார். செப். 4ம் தேதி காலை பாண்டியனின் அக்காள் ஷியாமளா, தனது தம்பி இறந்து விட்டதாக பாண்டியனின் மகன் தனபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தனபால், உடனடியாக கீழ் பாலப்பட்டிக்கு விரைந்தார். அங்கே பாண்டியன், உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்.

Advertisment

இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த தனபால், தனது தந்தையை யாரோ அடித்துக் கொன்று விட்டதாக மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடம் சென்றுசடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகத்தின் பேரில் ஷியாமளாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர், குடிபோதையில் தனது தம்பியை ஊதுகுழலால் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஷியாமளா, தனது தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தாயார் இறந்த பிறகு, அந்த வீட்டை சொந்தம் கொண்டாடக்கூடாது என பாண்டியன் அவரை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், செப். 3ம் தேதி இரவு, அக்காளும், தம்பியும் வீட்டில் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போதும் அவர்களுக்குள் வீட்டை யார் வைத்துக் கொள்வது என்பது குறித்து தகராறு ஏற்பட்டது. பின்னர், போதை தலைக்கேறியதால் பாண்டியன் தூங்கிவிட்டார். தம்பி உயிருடன் இருந்தால் தன்னை வீட்டை விட்டுத்துரத்தி விடுவார் எனக் கருதிய ஷியாமளா, மறுநாள் அதிகாலையில் வீட்டில் இருந்த ஊதுகுழலை எடுத்து அவரை சரமாரியாகத்தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன், ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்து விட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷியாமளாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

சொத்து தகராறில் உடன் பிறந்த தம்பியை, அக்காளே அடித்துக் கொன்ற சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.