/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_909.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். 25 வயதான இவர், அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். விஜய்க்கும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜெனிபர் சரோஜா என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட இந்த நட்பு காலப்போக்கில் நெருக்கமாக மாறியிருக்கிறது.
ஒருகட்டத்தில், விஜய்யும் ஜெனிபரும் காதலிக்க தொடங்கி அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவழித்து வந்தனர். நாளடைவில், இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெனிபர் சரோஜா தனது காதலனை பார்ப்பதற்காகவும், அவரோடு சேர்ந்து வாழ்வதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், காதலன் விஜய் வீட்டில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்தது. ஏற்கனவே விஜய்யின் சகோதரி கணவரைப் பிரிந்து அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். அப்போது, அங்குவந்த ஜெனிபரை பார்த்த விஜய்யின் சகோதரி, அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியிருக்கிறார். குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை கூறி ஜெனிபரை மீண்டும் திருநெல்வேலிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் காதலனை மறக்க முடியாமல் வாழ்ந்து வந்த ஜெனிபர், கடந்த 28ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெனிபரின் சகோதரர் புஷ்பராஜ் என்ற சிம்சன் விஜய் மீது கொலைவெறியுடன் இருந்திருக்கிறார். இந்த சூழலில், விஜய்யை தொடர்புகொண்ட புஷ்பராஜ்.. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். அதை நம்பிய விஜய் 1 ஆம் தேதி காலை ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறார்.
இதையடுத்து, புஷ்பராஜ் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது திடீரென இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, திடீரென ஆத்திரமடைந்த புஷ்பராஜ் தனது நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து, அங்கிருந்த பழைய கட்டிடப் பொருட்களைக் கொண்டு விஜய்யை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனாலும் வெறி அடங்காத புஷ்பராஜ்.. தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜய்யை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பாளையங்கோட்டை போலீசார், திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆனந்தி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி கைரேகை உள்ளிட்டவற்றை சேகரித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பாளையங்கோட்டை காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து.. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட புஷ்பராஜ் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விஜய்யின் கொலை சாதி ரீதியாக நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)