Advertisment

திமுக எம்.எல்.ஏ.வின் அண்ணன் அதிரடி கைது;பரபரப்பில் முத்துநகரம்!

Brother of DMK MLA from Ottapidaram constituency arrested

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள அயிரவன்பட்டியை சேர்ந்தவர் முருகேச பாண்டியன் (60) . ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்எல்ஏ சண்முகையாவின் அண்ணனும் திமுக பிரமுகருமான இவர், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோலார் கம்பெனிகளுக்கும், காற்றாலைகளுக்கு ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி கொடுப்பது மற்றும் காண்ட்ராக்ட், பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி முத்து மாடத்தி என்பவருக்கு ஓட்டப்பிடாரம் தாலுகா சிலோன் காலனி பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை முருகேசன் தன்னிடம் தருமாறு முத்து மாடத்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த நிலத்தை முருகேச பாண்டியன் தரப்பு அபகரிக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மார்ச் 3ஆம் தேதி முருகேச பாண்டியன் உட்பட 8 பேர் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து தனது மனைவி முத்து மாடத்தி உடன் பைக்கில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் அடுத்த மதிகெட்டான் ஓடை பகுதியில் வந்த போது, அங்கு காரில் வந்த முருகேச பாண்டியன் வழிமறித்து நிறுத்தி, சிலோன் காலனியில் உள்ள இடத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முத்து மாடத்தியை மிரட்டியதாகவும், இதை போட்டோ எடுத்த போது செல்போனை வாங்கி உடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘நிலத்தை கேட்டால் கொடுக்க மாட்டீயா? உன்னை என்ன செய்கிறேன் பார்.... என முத்து மாடத்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம்.

Advertisment

Brother of DMK MLA from Ottapidaram constituency arrested

இது தொடர்பாக முத்து மாடத்தி முத்தையாபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேச பாண்டியனை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்த பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் கம்பீரமாக வலம் வந்த முருகேச பாண்டியன், 2019-ல் நடைபெற்ற ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் தனது தம்பி சண்முகையா திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தம்பிக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளை வைத்து வேலை பார்த்தார். இதன் காரணமாக அதிமுக தலைமை, இளவேலங்கால் ஊராட்சி செயலாளராக இருந்த முருகேச பாண்டியனை 2019 மே 6ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கியது. அதன் பிறகு முருகேச பாண்டியன் திமுகவில் இணைந்து பயணித்தாலும், அதிமுகவினர் உடனான நட்பை அப்படியே தொடர்ந்து வந்தார்.

அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள சொகுசு பங்களாவில் தங்கியிருந்த அதிமுகவைச் சேர்ந்த மாஜி மந்திரியை, அயிரவன்பட்டி முருகேச பாண்டியன் இரவு 10 மணிக்கு பிறகு ரகசியமாக சந்தித்து, என் தம்பி சண்முகையாவுக்கு இந்த முறை திமுகவில் எம்எல்ஏ சீட் கிடைக்குமா என்பது சந்தேகமா உள்ளது.

திமுகவில் சீட் இல்லையென்றால், அதிமுகவில் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு எம்எல்ஏ சீட் வேண்டும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் 3 சி கொடுக்கிறேன். தலைமைக்கும் கேட்டதை அப்படியே கொடுத்துடுறேன். ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செலவு முழுவதும் நானே பார்த்துக் கொள்கிறேன். எனக்கு சீட் மட்டும் நீங்க வாங்கித் தாருங்கள் என டீல் பேசினாராம். இந்த தகவல் மெல்ல மெல்ல வெளியில் கசிந்து திமுக தலைமைக்கு சென்றது. இது தூத்துக்குடி மாவட்ட திமுக அதிமுகவினர் இடையே பேசுபொருளாக உலா வந்த நிலையில், முருகேச பாண்டியன் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது மாவட்ட அரசியலில் பல சந்தேகங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

arrested police Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe