
ஒவ்வொரு விவசாயியும் தங்களது வயல்களில் விளையும் காய்கறிகளை தங்களது அன்றாட பயன்பாடு மற்றும் தேவைக்கு போக மீதமுள்ள காய்கறிகளை வற்றல் போடுவது நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களை காரணம் காட்டி வேலைப்பளு, நவீனம் தந்த பரபரப்பு வாழ்க்கை முறை காரணமாக அனைத்தையும் மறந்து விட்டனர். ஆனால், தற்போது கரோனா காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஒவ்வொரு விவசாயியும் தாங்கள் விற்பனை செய்தது போக மீதமுள்ளதையும் மற்றும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளே விலைகுறைவாக விற்பதால் பொதுமக்களும் ஆர்வமுடன் காய்கறிகளை வற்றல் போடும் முறைக்கு மாறியுள்ளனர்.
இது குறித்து அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வற்றல் போடும் பெண்களிடம் கேட்டபோது, அதிகமாக விளைந்த காய்கறிகளை பயன்படுத்தி எதிர்கால, குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் காய்கறிகள் தட்டுப்பாடினை சமாளிக்கும் வகையில் வெயில் காலத்தில் வற்றலைப் போடுவது வழக்கம். அந்த வகையில் கத்தரிக்காய் பிசுக்கு வற்றலைப் போடுகிறோம் என்றனர்.

கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மறந்தே போன பல வகையான வற்றல் போட்டு காய்கறிகளை பதப்படுத்தி பயன்படுத்தும் முறைகளை வயதானவர்களின் ஆலோசனையோடு பஞ்சம் பட்டினி பேரிடர் காலங்களை சமாளிக்க தற்போது பலவகையான வற்றல்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர் பெண்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியே செல்ல முடியாத காரணத்தால் பழைய நடைமுறைகளை அசைபோடவும் நடைமுறைக்கு கொண்டு வரவும் கரோனா உதவியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதோடு ஊரடங்கு காரணமாக பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் திருமணமான பிள்ளைகள் வரை வீட்டில் இருப்பதால் இந்த அரிய வாய்ப்பை பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், அவற்றை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் வாய்ப்பையும் கரோனா ஏற்படுத்தி தந்துள்ளது. மேலும் பரபரப்பு வாழ்க்கையில் நேரமில்லை என்று பல நடைமுறைகளையும் மறந்து நம்மை எங்கே தொலைத்துவிட்டு அவதிப்படுகிறோம் என்பதனையும் உணரவைத்துள்ளது கரோனா என்றனர்.
மேலும், வற்றல் வகையில் தக்காளி உட்பட வெங்காயம், மிளகாயினை பயன்படுத்தி மோர் மிளகாய், புளி மிளகாய், கொத்தவரங்காய் பயன்படுத்தி மோர் பயன்படுத்தியும் காயவைத்து வற்றல் கத்தரிக்காயினை பயன்படுத்தி அரை வேக்காட்டில் உப்பு சிறிது போட்டு வேகவைத்து அதனை பிதுக்கி வெயிலில் காயவைத்து வற்றல் தயாரித்தல், வெறுமனே அப்படியே கத்தரிக்காயினை அரிந்து காயவைத்தல் மற்றும் பாகற்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், கோவைக்காய், சுக்காங்காய், பிரண்டை வற்றல், கிழங்கு வற்றல் என வற்றல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என பல அரிய பாரம்பரிய உணவு வகைகளை பதப்படுத்தும் நம் முன்னோர்களின் அறிவை நினைவூட்டினர் கிராமத்து பெண்கள்.