Advertisment

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்! - கமல்ஹாசன் அறிக்கை!

pic_5.jpg

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் செப்டம்பர் 1ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்தும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், “தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடிவருகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கைமீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

Advertisment

அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் பிற சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக முன்வைக்கும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகைஉயர்த்தப்பட வேண்டும். ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3,000/-, கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000/- உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வர வேண்டும்.

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

பார்வைக் குறைபாடு உடையவர்கள் கல்வி கற்க தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலை என சுமார் 10 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இயங்கிவருகின்றன. இவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க மாவட்டங்கள்தோறும் சிறப்புப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்படியான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளர்களும் அரசின் சாதாரணப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற சலுகையானது, நகரப் பேருந்துகளில் மட்டுமல்லாது அனைத்துப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.

தொழில்முனைவோராக விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் ஆகிவற்றை அதிகரிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவி எண் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும்.

கடுமையான மாற்றுத்திறனாளிகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவும் வகையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்பட வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, ஸ்மார்ட் கார்டு வழங்குவது, மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குவது, அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவது ஆகியவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்குச் செவிசாய்க்காமல் இருந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு உரியவற்றை செய்து கொடுக்க ஆவன செய்யும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Makkal needhi maiam kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe