
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருடைய மகன் நிஷாந்த்(30). பட்டம் படித்துள்ள இவர், சென்னை ஓரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். அதேபோன்று, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துவந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் தங்களது காதலைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 17ஆம் தேதி (இன்று) இருவருக்கு முறைப்படி திருமணம் செய்ய அப்போது முடிவு செய்துள்ளனர். இதற்கான திருமண அழைப்பிதழ்களை தயார்செய்து அதை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கிவந்தனர்.
கரோனா பரவல் காரணமாக நிஷாந் வேலைசெய்த நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனால், கடந்த 9ஆம் தேதி சென்னையில் இருந்து மணப்பெண் வீட்டிற்கு மணமகன் நிஷாந் கங்கைகொண்ட சோழபுரம் வந்துள்ளார். புது மாப்பிள்ளை தங்கள் வீட்டிற்கு வந்ததைக் கண்டு சந்தோஷமடைந்த மணப்பெண் வீட்டார், அவருக்குத் தடபுடலாக விருந்து தயார்செய்துள்ளனர். அதில் மீன் குழம்பு தயார் செய்யப்பட்டு மணமகனுக்குப் பலமான விருந்து வைத்துள்ளனர்.
மாப்பிள்ளை நிஷாந்த் வயிறு நிறைய சந்தோசமாக சாப்பிட்டுள்ளார். ஆனால், திடீரென நிஷாந்த் வாந்தி எடுத்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் உட்பட அனைவரும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் மணமகன் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? மீன் குழம்பு சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமணமாக இருந்த மணமகன் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.