The bride and groom who provided corona relief funds at the wedding ..!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது மணம்பூண்டி எனும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் ஹரி பாஸ்கர். இவருக்கும் மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் 23 வயது சாருமதி என்பவருக்கும் ஏற்கனவே பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

Advertisment

கரோனா நோய் பரவல் காரணமாக அரசு, திருமணம் உள்ளிட்டகுடும்ப விசேஷங்களை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், அந்த திருமணம் நேற்று (18.05.2021) காலை திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் மிக எளிய முறையில் நடந்து முடிந்தது.

Advertisment

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இயன்றவர்கள் கரோனா நிதி அளிக்குமாறு அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவர்களால் முடிந்த நிதியை அளித்துவருகின்றனர். அந்தவகையில், நேற்று திருமணமான மணமக்கள் இருவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் நிவாரண நிதிக்குத் தாங்கள் சேமித்து வைத்திருந்த 51 ஆயிரம் ரூபாயை வழங்க முடிவுசெய்தனர்.

அதன்படி திருமணம் முடிந்த கையோடு அந்த மணக்கோலத்திலேயே விழுப்புரம் சென்று, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டில் சந்தித்து கரோனா நிவாரண நிதியை வழங்கினார்கள்.நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மணக்கோலத்தில் வந்து கரோனா நிவாரணநிதி வழங்கிய மணமக்களின் செயலைப் பார்த்து பொதுமக்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துவருகின்றனர்.