
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செங்கால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்வேறு கிராமங்கள் வெள்ளநீரில் தவித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பொழிந்து வந்தது. தொடர் மழையால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் பாதுகாப்பைக் கருதி 22 ஆயிரம் கன அடி நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள செங்கால் ஓடையில் அதிகளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் செங்கால் ஓடையைச் சுற்றியுள்ள அகரபுத்தூர் வானமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. குறிப்பாக வானமாதேவி பகுதியில் அதிகம் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். உடனடியாக மீட்புப் படையினர் அங்கு வந்து கயிறு மூலம் கரையைக் கடந்து சிக்கியுள்ள ஆறு பேரையும் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.