
தமிழ்நாட்டில் சிதிலமடையாத எஞ்சியுள்ள சங்ககால கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கனமான கோட்டைச் சுற்றுச் சுவர்களுடன் அகழி ஆகியவை காணப்படுவதுடன் சுற்றிலும் செங்கல், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கல்வெட்டு, இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள் வெளிப்பரப்பில் கிடப்பதால் இதனை அகழாய்வு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டு அகழாய்வு செய்ய உத்தரவு பெற்றார்.
இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி கிடைத்து முனைவர் இனியன் இயக்குநராக கொண்டு அகழாய்வு செய்யப்பட்டபோது, குறியீடுகள், தமிழி எழுத்துகளுடன் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மணிகள், வட்டச் சில்லுகள், அம்போரா உள்பட பல பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சிறிய செங்கல் கட்டுமானமும் காணப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவையடுத்து கடந்த வாரம் கவிதா ராமு ஐஏஎஸ் தலைமையில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னத்துரை ஆகியோருடன் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்து பேசும்போது, சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால கோட்டை இங்கே காண முடிகிறது. இங்கு அரண்மனை காணப்படலாம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி, இணை இயக்குநர் இரா. சிவானந்தம், தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் க. ராஜன் ஆகியோர் வழிகாட்டுதல்படி பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த. தங்கதுரை மற்றும் ஆய்வு மாணவர்கள் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே 7 முதல் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டிருப்பதால் பெரிய அளவில் அகழாய்வு தகவல்கள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.