
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நவமால் காப்பேர் கிராமம். இந்தக் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார் சபிரா பீபி. இவர், ஜாதிச் சான்று, வாரிசு சான்று கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம், மனுக்களை வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்வதற்காக பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஒரு மனுதாரர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்து விரைவில் சான்றிதழ் கிடைப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டபோது, அந்தக் கிராம நிர்வாக அலுவலர் பணம் கேட்டு வாங்குவது போன்ற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பாகிவருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்ரமணியன் விசாரணை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சபீரா பீபியை நவமால் காப்பேர் கிராமத்திலிருந்து பணியிட மாற்றம் செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.