
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (50). இவர், ஒப்பந்த தொழில் தொடங்க ரூ. 75 லட்சத்திற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 'ஆன்லைன்' வாயிலாக கடந்த ஆகஸ்டு மாதம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பல மாதங்களாகியும் விண்ணப்பம் நிலுவையில் இருந்து வந்தது.
இதுகுறித்து கேட்டபோது காங்கேயம் தாசில்தார் சிவகாமி (42), சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 60 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கேசவன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் பேரில் காங்கேயம் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற கேசவன், தாசில்தார் சிவகாமியை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.60 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
அதனை தாசில்தார் சிவகாமி வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறையினர் சிவகாமியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரது அலுவலகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. அதன் பின்னர் காங்கேயம் அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள தாசில்தார் வீட்டிலும், திண்டுக்கல்லில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.