தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தத்திட்டத்தை உங்கள் தொகுதிகளில் தொடங்கி வைக்க வேண்டும் என திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, விசிக, கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தங்கள் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தமிழக வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட உள்ள பள்ளி மாணவர்களுக்கானகாலை சிற்றுண்டி திட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளேன். நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது, ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக 1,545 பள்ளிகளைச்சேர்ந்த சுமார் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார்.