Advertisment

காலை உணவுத் திட்டம்; ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி துவக்கிவைத்தார்

breakfast plan; Minister Muthuswamy inaugurated in Erode

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்கள், மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

அதன்படி இன்று (25ம் தேதி) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளோடு அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “இத்திட்டமானது முதற்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் மலைக் கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள் என 96 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 8 ஆயிரத்து 903 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று (25ம் தேதி) முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 983 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும், 42 ஆயிரத்து 848 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,079 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 51 ஆயிரத்து 751 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆட்சியர் மணீஷ், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காயத்திரி இளங்கோ மற்றும் கல்வித் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

muthusamy Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe