திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை காவேரி நகா் பகுதியை சோ்ந்தவா் பஞ்சவர்ணம்(55). இவருடைய கணவர்துபாயில் பணியாற்றி வருகிறார். இவா்களுக்கு 2 மகள் உள்ளனா். அதில் மூத்த மகள் சென்னையில் வசித்து வருகிறார். எனவே தன்னுடைய மகளை பார்ப்பதற்காக கடந்த 3ஆம் தேதி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதில் கடந்த 15ஆம் தேதி பஞ்சவா்ணத்தின் இளைய மகள் மட்டும் பெட்டவாய்த்தலையில் உள்ள வீட்டிற்கு வந்துவிட்டு 17ஆம் தேதி மீண்டும் சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பஞ்சவா்ணத்தின் உறவினரான நடராஜன் என்பவா் கோழிகளுக்கு தீவனம் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும் 4 பேருடைய கை ரேகைகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதில் மொத்தம் 70.5 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி, பட்டுப் புடவைகள் 7, தங்க வாட்ச் 1, பணம் 2 லட்சத்து 20 ஆயிரம், என மொத்தம் 13 லட்சத்து 15ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினா் மா்ம நபா்களை தேடி வருகின்றனர்.