
திருச்சி மாவட்டம், வயலூர் சாலையில் உள்ள அம்மையப்ப நகரில் லட்சுமணன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கடந்த 12ம் தேதி லட்சுமணன் தனது மனைவி தனலட்சுமி, அவரின் மகன் சண்முகம் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய அனைவரும் சொந்த ஊரான பொன்னமராவதிக்குச் சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், முதலில் சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், தன்னுடைய தந்தை லட்சுமணனுக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், அவர் நேற்று மனைவியுடன் திருச்சி வந்தார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதில் இருந்த 50 சவரன் நகை, 5 ஆயிரம் பணம் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு பதிவாகியுள்ள கைரேகைகளை எடுத்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.